டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- அண்ணாமலை பேட்டி
டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கவர்னரிடம் அதிகாரம் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை,
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது ,
பாரதியாரின் கனவு இப்போது நனவாகி உள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்து உள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் நடைபயணம் குறித்து பொன்முடி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஏ.சி. அறையில் இருந்து அரசியல் செய்கிறார்கள். . தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். பா.ஜ.க. நடை பயணத்தால் அரசியல் புரட்சி ஏற்பட்டு உள்ளது.
நீட் மசோதாவில் கவர்னரின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும்.டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கவர்னரிடம் அதிகாரம் உள்ளது.டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அந்த பொறுப்பில் இருப்பதற்கு சைலேந்திர பாபுவுக்கு தகுதி உள்ளதா என்று கவர்னர் பார்ப்பதாக நான் நினைக்கிறேன். இதில் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. என தெரிவித்தார்.