கவர்னர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்;திருச்சியில் வைகோ பேட்டி
கவர்னர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திருச்சியில் வைகோ கூறினார்.
திருச்சியில் வைகோ, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் 80 சதவீதத்துக்கு மேல் நடந்து முடிந்துவிட்டது. இதுவரை அமைப்புகள் இல்லாத இடங்களிலும் தற்போது அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்சி முன்பைவிட நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை விரைவில் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. கவர்னர் ரவி தனக்கு இல்லாத அதிகாரத்தை தானே ஏற்படுத்தி கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி கொண்டு இருக்கும்போது, குறுக்கே புகுந்து உளறி கொட்டிக் கொண்டு இருக்கிறார்.
கவர்னரின் எந்த வார்த்தையும் ஏற்றுக்கொள்ள இயலாததாகும். கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும், அல்லது அவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகம் தி.மு.க. ஆட்சியின் இந்த 2 ஆண்டுகளில் பெற்ற சிறப்பைவிட வரும் ஆண்டுகளில் அதிக சிறப்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து விஷயங்களையும் யோசித்து தமிழகத்துக்கு எது தேவையோ, எது நல்லதோ அதை செய்து வருகிறார்.
அனைத்து மாணவ-மாணவிகளும் நந்தினி போன்று மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது. கவர்னர், கவர்னராக நடந்து கொள்ளவில்லை. அவர் ஒரு கட்சியின் ஏஜெண்டாக நடந்து கொள்கிறார். இதுபோன்ற நிலை இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த போக்கு தான்தோன்றித்தனமான போக்கு. கவர்னர் அவரது பதவியில் நீடிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.