ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு, கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39-வது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை அவசரச்சட்டம் காலாவதியான பிறகு, சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டத்தடைசட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் 73 நாட்களாகியும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் தாமதம் செய்வது நியாயம் அல்ல. ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், குடும்பச் சீரழிவுகளும் தொடர்கதையாகி வருகின்றன. சூழலின் அவசரத்தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story