ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னரே பொறுப்பு ஏற்கவேண்டும் - அன்புமணி ராமதாஸ்


ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னரே பொறுப்பு ஏற்கவேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 42 ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 13-வது தற்கொலை இது. இதுவரை நடந்த தற்கொலைகளுக்கும், இந்த தற்கொலைக்கும் கவர்னரே பொறுப்பேற்கவேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 112 நாட்கள் ஆகிவிட்டன. அதுகுறித்து கவர்னர் எழுப்பிய ஐயங்களுக்கு, சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் விளக்கம் அளித்து 68 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் சட்டத்திற்கு இன்றுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையல்ல.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த அரசின் விளக்கங்கள் மனநிறைவு அளித்தால் கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் திருப்பி அனுப்ப வேண்டும். இரண்டையும் செய்யாமல் சட்டத்தை கிடப்பில் போட்டு, ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக கவர்னருக்கு அரசு அழுத்தம் தரவேண்டும்; இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story