தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை
உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை,
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மெரினாவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிபொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு தடை வித்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், தடையை மீறி பஞ்சு மிட்டாயை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.