அரசு பஸ் கண்டக்டரைதாக்கிய தொழிலாளி கைது


அரசு பஸ் கண்டக்டரைதாக்கிய தொழிலாளி கைது
x

சேலத்தில் நடுரோட்டில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சேலம்

கண்டக்டர் மீது தாக்குதல்

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடிக்கு நேற்று மதியம் டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் கண்டக்டராக குப்பனூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (வயது 36) என்பவர் பணியாற்றினார். 2-வது அக்ரஹாரம் ராஜகணபதி கோவில் அருகே பஸ் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பயணம் செய்த நபர் ஒருவர் திடீரென பஸ்சில் இருந்து பாதியிலேயே கீழே இறங்கினார்.

இதை பார்த்த கண்டக்டர் அந்த நபரிடம் ஏன் பயணச்சீட்டு எடுக்காமல் கீழே இறங்குகிறீர்கள்? என கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர் நடுரோட்டில் வைத்து லட்சுமிகாந்தனை தாக்கினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நின்றன.

தொழிலாளி கைது

தகவல் கிடைத்ததும் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கண்டக்டர் லட்சுமிகாந்தனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து கண்டக்டருடன் தகராறு செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அந்த நபர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ் (52) என்பது தெரியவந்ததும். மேலும் லட்சுமிகாந்தனை தாக்கியதுடன் அவரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக சதீசை போலீசார் கைது செய்தனர். அரசு பஸ் கண்டக்டரை நடுரோட்டில் பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.


Next Story