அரசு கேபிள் டி.வி. செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


அரசு கேபிள் டி.வி. செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

அரசு கேபிள் டி.வி. செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓ.டி.டி. தளத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை,

உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் டி.வி. சேவையை பொதுமக்களுக்கு வழங்கவும் 2007-ம் ஆண்டு 'அரசு கேபிள் டிவி நிறுவனம்' உருவாக்கப்பட்டு, 2011-ம் ஆண்டு 'தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் 2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். உரிமம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பொதுமக்களுக்கு இலவச தரநிலை வரையறை எனப்படும் எச்.டி. 'செட்டாப்' பாக்ஸ்களை வழங்கி 2017-ம் ஆண்டு டிஜிட்டல் சேவையையும், 2018-ம் ஆண்டு எச்.டி. சேவையையும் தொடங்கியது.

குறைந்த கட்டணத்தில் சேவை

இந்த 'செட்டாப்' பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதன்மூலம் 136 கட்டணமில்லா சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்கள் ரூ.140 மற்றும் சரக்கு சேவை வரி என்ற கட்டணத்தில் டிஜிட்டல் முறையில் இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

கடந்த 19.11.2022 அன்று ஒளிபரப்பு சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடர்பாடுகளை உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், வணிக திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார்.

ஓ.டி.டி. சேவை

மேலும் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்குவது குறித்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை வழங்கக்கூடிய எச்.டி. செட்டாப் பாக்ஸ்களை அடுத்த 6 மாத காலங்களில் வழங்குவது மற்றும் ஓ.டி.டி. தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்ட்டது.

எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், மேலும் அதிக சந்தாதாரர்களை சேர்த்து, ஒரு முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்படவும் ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜான் லூயிஸ், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ரவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.4,250 கோடி ஒப்பந்தம்

ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதி உதவியுடன் (சுமார் ரூ.4,250 கோடி), நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்திய அரசு இடையே கடந்த நவம்பர் 24-ந் தேதி 500 மில்லியன் யூரோ (சுமார் ரூ.4,250 கோடி) கடன் ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து, சென்னையில் கடந்த 2-ந் தேதி ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இவ்விரண்டு ஒப்பந்தங்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று பரிமாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னையில் உள்ள ஜெர்மன் நாட்டு தூதரகத்தின் துணைத்தலைவர் மிக்கேலா குச்லர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story