அரசு கல்லூரி விரிவுரையாளர் சாவில் சந்தேகம்
கண்டமங்கலம் அருகே அரசு கல்லூரி விரிவுரையாளர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்
கல்லூரி விரிவுரையாளர் சாவு
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கலைக்கந்தன்(வயது 37). இவர் சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தாவரவியல் மற்றும் தாவர உயிர்தொழில்நுட்பத் துறை கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அவர் தனது சொந்த ஊரான சொர்ணாவூர் கீழ்பாதியில் உள்ள தனது வீட்டில், கடந்த 6-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். மறுநாள் 7-ந் தேதி மாலை அவரது உடல் அப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கலைக்கந்தன் மனைவி சிவசங்கரி தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சாவில் சந்தேகம்
வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை அறிவியல் கல்லூரி தாவரவியல் மற்றும் தாவர உயிர்தொழில் நுட்பவியல் துறை தலைவராக பாலாஜி உள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அயல்பணியாக இந்த துறைக்கு உதவி பேராசிரியராக ரவிமைசின் என்பவர் புதிதாக வந்துள்ளார். அவர், கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி துறை தலைவரிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து துறை தலைவர் பாலாஜி, கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஜூன் 21-ந் தேதி, இதுகுறித்து கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது துறையின் கவுரவ விரிவுரையாளரான எனது கணவர் கலைக்கந்தன் மற்றும் ஆய்வக உதவியாளர் முருகேசன் ஆகிய இருவரும் ரவிமைசினுக்கு எதிராக சாட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவிமைசின், எனது கணவர் கலைக்கந்தன் மற்றும் முருகேசனுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கலைக்கந்தன், கடந்த 2-ந் தேதி கல்லூரியில் புகார் மனு கொடுத்த நிலையில், 6-ந் தேதி வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எனது கணவர் கலைக்கந்தன் சாவில் சந்தேகம் இருக்கிறது. எனவே அவரது சாவுக்கு காரணமான ரவிமைசின் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கணவரை இழந்து தவிக்கும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.