பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

மேட்டுப்பாளையத்தில் விபத்தில் பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி வரலட்சுமி (வயது 59). மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டியில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் வரலட்சுமி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து வரலட்சுமி வாகன விபத்து இழப்பீடு வழங்க கோரி மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பி.கே.சிவக்குமார், கடந்த ஜனவரி மாதம் வரலட்சுமிக்கு ரூ.9½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால், இதுவரை இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வரலட்சுமி, நீதிமன்ற அலுவலர் எஸ்.முனிராஜ் ஆகியோர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு வரலட்சுமியால் அடையாளம் காட்டப்பட்ட மேட்டுப்பாளையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு சொகுசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் முதல் முறையாக நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.






