விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:45 PM GMT)

செஞ்சியில் விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி நடுவழியில் இறக்கிவிட்டதால் பயணிகள் திடீர் மறியல்

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சியை அடுத்த தாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமூர்த்தி மகன் விஜயகாந்த்(வயது 31). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நண்பர் ராம்கி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன பஸ் மோதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விஜயகாந்தின் இறப்புக்கு நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை வீரமூர்த்தி வக்கீல் சீனுவாசன் மூலம் செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட விஜயகாந்த் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துகழகம் ரூ.12 லட்சத்து 79 ஆயிரத்து 200 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கடந்த 16.7.2020 அன்று உத்தரவிட்டார். ஆனால் இதுநாள் வரை நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவு நிறைவேற்று மனுவை வீரமூா்த்தி மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி நளினகுமார் இதுநாள் வரை வட்டியுடன் சேர்த்து ரூ.17 லட்சத்து 63 ஆயிரத்து 816 நஷ்ட ஈடு வழங்க வேண்டும், அப்படி வழங்கவில்லை என்றால் சம்பந்தபட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் குறித்த காலத்துக்குள் நஷ்ட ஈடு வழங்காததால் நேற்று காலை திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன அரசு பஸ்சை செஞ்சி கூட்டு ரோட்டில் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்களை நடுவழியில் இறக்கி விட்டால் எப்படி? என கேட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் பயணிகளை சமாதானம் செய்து மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் செஞ்சி கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.


Next Story