நாளை கிராம சபை கூட்டம் - விவசாயிகள் பங்கேற்று பயனடைய தமிழக அரசு அழைப்பு


நாளை கிராம சபை கூட்டம் - விவசாயிகள் பங்கேற்று பயனடைய தமிழக அரசு அழைப்பு
x

நாளை நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்று பயனடைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை,

நவம்பர் மாதம் 1-ந்தேதி (நாளை) உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.

மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரம் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அக்டோபர் இரண்டாம் தேதிக்குப் பின் வேளாண் - உழவர் நலத்துறையின் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரமும், நவம்பர் ஒன்றாம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே,கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து விவசாயிகளும் திரளாகப் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story