டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு விருத்தாசலம் பகுதியில் மறியலில் ஈடுபட முயற்சி


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதுவதற்கு  தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு  விருத்தாசலம் பகுதியில் மறியலில் ஈடுபட முயற்சி
x

விருத்தாசலம் பகுதியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

கடலூர்


ராமநத்தம்,

தமிழகத்தில் நேற்று குரூப்-4 தேர்வு நடந்தது. இதில், ராமநத்தத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 9 மணிக்கு பிறகு வந்த 20-க்கும் மேற்பட்ட தேர்வா்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் அவர்கள் தேர்வு மையம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

உடன் திட்டக்குடி சமூக நல தாசில்தார் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அசோகன் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வருவதற்கு பஸ் வசதி இல்லாததால் தாமதம் ஆனதாக தெரிவித்தனர். இருப்பினும் அவர்களை தேர்வு எழுத அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

சாலை மறியல்

இதேபோல் மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள தேர்வு மையத்திற்கு 6 பேர் மட்டும் சில நிமிடம் தாமதமாக வந்தனர். இதனால் அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் தேர்வு மையத்துக்கு எதிரே விருத்தாசலம் -உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடன் அவர்களை அங்கிருந்த அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதித்து உள்ளே அனுப்பி வைத்தனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி தேர்வு மையத்துக்கு 9:10 மணிக்கு சுமார் 28 பேர் வந்தனர். ஆனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஸ்ரீமுஷ்ணத்தில் 6 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. இந்த மையங்களில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் செல்வபாண்டி ஆய்வு செய்தார். அப்போது ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர் உடன் இருந்தார்.


Next Story