டெல்லியில் தமிழக தொழில் அதிபரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்


டெல்லியில் தமிழக தொழில் அதிபரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்
x

டெல்லியில் தமிழக தொழில் அதிபரை கடத்தி துப்பாக்கி முனையில் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கொண்ட கும்பல், அரியானா மாநில தமிழ் போலீஸ் அதிகாரியின் தேடுதல் வேட்டையில் சிக்கியது.

நூற்பாலை அதிபர்

திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் கே.எஸ்.வில்வபதி (வயது 55). இவர் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரை டெல்லியில் இருந்து ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு, வங்காளதேசத்துக்கு 50 டன் நூல் தேவை என்றும், ரூ.1¼ கோடிக்கு வியாபாரம் நடக்கும் என்றும் பேசி அதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட டெல்லிக்கு வருமாறு அழைத்தார்.

உடனே வில்வபதி தன்னுடைய மேலாளர் வினோத்குமாருடன் (28) விமானம் மூலம் கடந்த 7-ந்தேதி டெல்லி சென்றார். அங்கு அவரை ஒரு கும்பல் கடத்தி அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு இடத்துக்கு கொண்டு சென்றது.

ரூ.50 லட்சம்

வில்வபதியை கொலை செய்வதற்கு ஒருவர் ரூ.40 லட்சம் பேரம் பேசியுள்ளதாகவும், வில்வபதி ரூ.50 லட்சம் தந்தால் அவரை விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளனர். உடனே பணத்தை தயார் செய்யும்படி துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். மேலும் இருவரது உடலிலும் போலி வெடிகுண்டை கட்டி, தப்பிக்க நினைத்தால் வெடித்து சிதறிப்போவீர்கள் என்றும் பயமுறுத்தியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து தப்பிக்க வில்வபதி, ஊரில் உள்ள தன் மகளின் மாமனாருக்கு (சம்பந்தி) போன் செய்துள்ளார். அப்போது, 'வியாபார விஷயமாக தனக்கு 50 லட்ச ரூபாயை ரொக்கமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒருவித பதற்றத்துடன் கூறியுள்ளார். வில்வபதி வழக்கமாக ரொக்க பரிமாற்றம் செய்வதில்லை.

போலீசில் புகார்

இதனால் சந்தேகம் அடைந்த வில்வபதியின் சம்பந்தி, டெல்லியில் உள்ள சக்திபெருமாளிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க்கின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

அஸ்ரா கார்க், உடனே அரியானா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்குள்ள ஐ.ஜி. சதீஷ் பாலன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனால் இந்த விஷயத்தில் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார்.

தனிப்படை உதவியுடன் மீட்பு

தனிப்படை உதவியுடன் சினிமா பாணியில் துப்புறியும் பணிகள் நடைபெற்றன. இறுதியாக இரவு 9 மணி அளவில் கடத்தல்காரர்கள் டெல்லி சியாம் நகரில் வில்வபதியையும், வினோத்குமாரையும் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டனர்.

அங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆசிப் உசைன், முகமது கரிம், டெல்லியைச் சேர்ந்த ஜிர்வானி பாபு(பூர்வீகம் தமிழ்நாடு), முகமது ஆசாத், சோனு ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.


Next Story