மகளிர் உரிமைத் தொகை வழங்க ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதி பயன்படுத்தப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அப்பிரிவு மக்களுக்கு மட்டுமே செலவிட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களின் நிதியை பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அப்பிரிவு மக்களுக்கு மட்டுமே செலவிட இயலும் என்றும், இந்த தனி ஒதுக்கீட்டு முறையைத் தான் மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் பின்பற்றி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இது போலவே 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.7,000 கோடியில், பட்டியல் இனத்தவருக்காக ரூ.1,540 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த தொகையை பட்டியல் இனத்தவருக்கு மட்டும் தான் செலவிட இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் நிதி பிற திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.