டாக்டர் போல் நடித்து காரை வாடகைக்கு எடுத்தார் - டிரைவரிடம் ரூ.9 ஆயிரம் கள்ளநோட்டுகளை கொடுத்து வாலிபர் நூதன மோசடி


டாக்டர் போல் நடித்து காரை வாடகைக்கு எடுத்தார் - டிரைவரிடம் ரூ.9 ஆயிரம் கள்ளநோட்டுகளை கொடுத்து வாலிபர் நூதன மோசடி
x
தினத்தந்தி 1 July 2023 8:07 AM GMT (Updated: 1 July 2023 8:35 AM GMT)

அரசு ஆஸ்பத்திரி டாக்டர் போல் நடித்து காரை வாடகைக்கு எடுத்து டிரைவரிடம் ரூ.9 ஆயிரம் கள்ளநோட்டுகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மர்ம வாலிபர் ஒருவர், தனது பெயர் அர்ஜூன் எனவும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுவதாகவும், திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல வேண்டும் என்று கூறி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை பதிவு செய்தார்.

அதன்பேரில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டிரைவர் சுதீர் (வயது 46) என்பவர் காரில் நேற்று முன்தினம் இரவு சென்னை கீழ்ப்பாக்கம் வந்தார். தயாராக நின்ற 'டிப்-டாப்' வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தினார். டிரைவருக்கும் ஜூஸ் உள்ளிட்டவைகளை வாங்கி கொடுத்தார்.

சிறிது நேரத்தில் அந்த 'டிப்-டாப்' வாலிபர், "என்னுடன் பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவருக்கு அவசரமாக 'கூகுள் பே' மூலம் ரூ.9 ஆயிரம் அனுப்ப வேண்டும். என்னிடம் 'கூகுள் பே' இல்லை. நீங்கள் அனுப்பி வையுங்கள், நான் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருகிறேன்" என்று கூறினார்.

அதன்பேரில் டிரைவர் சுதீர், அந்த வாலிபர் கொடுத்த செல்போன் எண்ணுக்கு 'கூகுள் பே' மூலம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் வெளியே சென்ற அந்த வாலிபர் பணத்துடன் திரும்பி வந்தார். 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.9 ஆயிரத்தை சுதீரிடம் கொடுத்த அவர், தனது செல்போனில் சிக்னல் இல்லை என்று கூறி டிரைவர் சுதீரின் செல்போனை வாங்கி கொண்டு பேசிவிட்டு வருவதாக மீண்டும் பாரில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் பாரில் மது அருந்தியதற்காக ரூ.2 ஆயிரம் பில் தொகை கட்டவேண்டும் என்று ஊழியர்கள் கேட்டனர். அந்த வாலிபர் கொடுத்த பணத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்தை டிரைவர் சுதீர் எடுத்து கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய பார் ஊழியர்கள், சோதனை செய்தபோது அது கள்ளநோட்டுகள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று டிரைவர் சுதீரிடம் விசாரித்தனர். அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி சோதனை செய்தபோது அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் விசாரித்தபோது அர்ஜூன் என்ற பெயரில் டாக்டர் யாரும் பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து டிரைவர் சுதீரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்மையிலேயே அந்த 'டிப்-டாப்' வாலிபர், டாக்டர் போல் நடித்து கள்ளநோட்டுகளை டிரைவர் சுதீரிடம் கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்டாரா?. அல்லது டிரைவர் பொய் சொல்கிறாரா? இருவரும் கூட்டுசேர்ந்து கள்ளநோட்டுகளை மாற்ற முயன்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story