மலேசிய நாட்டை சேர்ந்தவர் மர்ம சாவு
மலேசிய நாட்டை சேர்ந்தவர் மர்மமான முறையில் இறந்தார்.
மலேசிய நாட்டை சேர்ந்தவர் முத்துவேல்(வயது 69). புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 8-ந் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 10-ந் தேதி முத்துவேலின் உறவினர் விஜயசாரதி அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விஜயசாரதி ஓட்டல் மேலாளர் ஜாகீர்உசேனை தொடர்பு கொண்டு, அது பற்றி கூறினார். உடனே ஓட்டல் மேலாளர், முத்துவேல் தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து மாற்றுச்சாவி மூலம் அறையின் கதவை திறந்து பார்த்தபோது படுக்கையில் முத்துவேல் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று முத்துவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், முத்துவேல் மலேசியாவில் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து முத்துவேல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.