பொள்ளாச்சி நகரில் சுகாதார பணிகள் பாதிப்பு
2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பொள்ளாச்சி நகரில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 15 மெட்ரிக் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது.
பொள்ளாச்சி
2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பொள்ளாச்சி நகரில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 15 மெட்ரிக் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது.
2-வது நாளாக வேலைநிறுத்தம்
பொள்ளாச்சியில் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கக்கோரி நேற்று 2-வது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அங்கு தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் பேசினார்கள். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 260 பேரும் பணிக்கு வராததால் நகராட்சி பகுதியில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடந்ததால், கடும் துர்நாற்றம் வீசியது.
குறைந்தபட்ச ஊதியம்
இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அரசாணை அடிப்படையில் கோவை மாவட்ட கலெக்டரின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணய சட்டப்படி தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோக பணியாளர்கள் உள்பட அனைத்து தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அதன்படி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.606, பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529 வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
குப்பைகள் தேக்கம்
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நிரந்தர பணியாளர்கள் 70 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 267 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் காரணமாக சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக தினமும் 28 மெட்ரிக் டன் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும். ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு வராததால் 60 சதவீத குப்பைகள்(சுமார் 15 மெட்ரிக் டன்) தேக்கம் அடைந்து உள்ளது என்றனர்.