ராசிபுரம், வெண்ணந்தூர் பகுதிகளில் கனமழை


ராசிபுரம், வெண்ணந்தூர் பகுதிகளில் கனமழை
x

ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

நாமக்கல்

தொடர் மழை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் கழிவுநீர் ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மலைப்பாதைகளில் ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் வெண்ணந்தூர் அடுத்த சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கடும் வெயில் தாக்கம் இருந்தது. இதையடுத்து மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி 7 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளிலும், வயல்வெளிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு

ராசிபுரம் பகுதியில் லேசாதன மழையும், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இரவில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழையும் பெய்தது. இதனால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதேபோல் திம்மநாயக்கன்பட்டி, ஆயில்பட்டி, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை முதல் மாலை கடும் வெயிலால் பொதுமக்கள் வாடினர். பின்னர் மாலை சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story