சேலம் மாவட்டத்தில் கனமழை:எடப்பாடியில் 44 மில்லி மீட்டர் பதிவு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அதிகபட்சமாக எடப்பாடியில் 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அதிகபட்சமாக எடப்பாடியில் 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கனமழை
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி, தலைவாசல், காடையாம்பட்டி, கரியகோவில் மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் வயல்வெளிகளிலும் மழைநீர் தேங்கியது. ஏற்காட்டிலும் தொடர் மழையினால் அங்கு கடும் குளிர் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
எடப்பாடியில் 44 மி.மீட்டர் மழை
தொடர் மழை காரணமாக மலை பகுதிகளில் ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக எடப்பாடியில் 44 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தலைவாசல்-29, காடையாம்பட்டி-26, கரியகோவில்-20, ஆத்தூர்-17, பெத்தநாயக்கன்பாளையம்-16, ஆணைமடுவு-12, ஏற்காடு-11.40, சங்ககிரி-8, மேட்டூர்-7.20, ஓமலூர்-4.20, கெங்கவல்லி, தம்மம்பட்டியில் தலா-2, சேலம்-.50 ஆகும்.
சேலம் மாநகரில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
எடப்பாடி
எடப்பாடி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுவதும், வீட்டின் மேல் கூரை சேதம் அடைவதும் வாடிக்கையாகி விட்டது. இதற்கிடையே எடப்பாடியை அடுத்த தவாந்தெரு பகுதியைச் சேர்ந்த வள்ளி (40) என்பவருக்கு சொந்தமான வீடு நேற்று பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்காமல் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் படுத்து இருந்த வள்ளி, அவரது குடும்ப உறுப்பினர்கள் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தனர்.