திருச்சியில் பலத்த மழை எதிரொலி: பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஐதராபாத் விமானம்


திருச்சியில் பலத்த மழை எதிரொலி: பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஐதராபாத் விமானம்
x

திருச்சியில் பலத்த மழை எதிரொலி: பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஐதராபாத் விமானம்

திருச்சி

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக பெங்களூரு, ஐதராபாத், புதுடெல்லி சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் புது டெல்லியில் இருந்து ஐதராபாத் வழியாக மாலை 5.40 மணியளவில் திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானம் மழையின் காரணமாக, திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் அந்த விமானம் பெங்களூருவில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தை இரவு 8.40 மணிக்கு வந்து அடைந்தது. இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சுமார் 3 மணி நேரம் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று திருச்சியில் இருந்து 5 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதாவது திருச்சியில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்டு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மதியம் 1.55 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்றது. மற்றொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 6.15 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதேபோன்று திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 7.20 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது. திருச்சியில் இருந்து சார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மதியம் 1.55 மணிக்கு பதிலாக 2.55 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் மேற்கண்ட விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பெரும் அவதியை சந்தித்தனர்.


Next Story