வால்பாறையில் கனமழை கொட்டியது


வால்பாறையில் கனமழை கொட்டியது
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் நீங்கி உள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் நீங்கி உள்ளது.

கோடை மழை

வால்பாறையில் கோடை வெயில் வாட்டி வந்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள புற்கள், மரங்கள் காய்ந்து வறட்சியான காலநிலை போல் காணப்பட்டது. தொடர்ந்து வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு செடி, கொடிகள் எரிந்து நாசமானது. இதனால் கோடை மழை எப்போது பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி வால்பாறையில் ஆலங்கட்டி மழை பெய்தது. தொடர்ந்து கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

வால்பாறையில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 4 மணி வரை விட்டு, விட்டு இடியுடன் கூடிய கனமழையாக பெய்தது. இதனால் வால்பாறையில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி சென்று திரும்பிய மாணவ-மாணவிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். மேலும் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காலநிலை நிலவியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

வால்பாறையில் வழக்கத்திற்கு மாறாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. தற்போது கோடை மழை பெய்து வருவதால், வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நீங்கி உள்ளது. மழையால் காய்ந்த புற்கள் பசுமையாக மாறி வருகிறது. மரங்களில் இலைகள் துளிர்த்து வருகின்றன. தொடர்ந்து வால்பாறையில் மழை பெய்ததால் தேயிலை விவசாயம் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கோடை மழை காரணமாக அரபிக்கா வகை காபி செடிகளில் பூக்கள், அரும்புகள் தோன்றி உள்ளன. இதனால் வருகிற நாட்களில் காபி உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை மழை பெய்து வரும் நிலையில், ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Related Tags :
Next Story