சென்னையில் வெளுத்து வாங்கிய மழை


சென்னையில் வெளுத்து வாங்கிய மழை
x

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

சென்னை

சென்னை,

நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான தூறல் இருந்தது. மாலையில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்கியது. வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தியாகராயநகர், புரசைவாக்கம், கோடம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வழக்கம்போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக பிரதான சாலைகளில் வாகனங்கள் இயல்பை விடவும் மெதுவாகவே நகர்ந்து சென்றதையும் காணமுடிந்தது.

தமிழகம், புதுச்சேரியில் வருகிற 30-ந் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று பலமாக வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி வால்பாறை, சின்னகல்லாறில் தலா 11 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அவலாஞ்சியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.


Next Story