கரூர் நகரப்பகுதிகளில் கனமழை
கரூர் நகரப்பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெயில் தாக்கம் அதிகம்
கரூரில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வெயில் சூடுபிடிகக்க ஆரம்பித்தது. அப்போது 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டியது. பின்னர் சில நாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பின்னர் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. சில நாட்களில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் மழை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை. பின்னர் கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வாட்டி வதைத்தது. 106.4 வரை வெயில் கொளுத்தியது. இந்நிலையில் கடந்த 29-ந்தேதி அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தது.
கனமழை
அதன்பின்னர் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. கரூரில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. இந்நிலையில் கரூரில் நேற்று மாலை 5 மணியளவில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.
இந்த மழையானது கரூர், தாந்தோன்றிமலை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி வரை கன நீடித்ததது.
இந்த திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. இந்த திடீர் மழையால் கரூரில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.