கரூர் மாவட்டத்தில் கனமழை


கரூர் மாவட்டத்தில் கனமழை
x

கரூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

கரூர்

காற்றுடன் மழை

தமிழ்நாட்டின் மேல்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. கரூரில் நேற்று காலை முதல் வெயில் இருந்தது. இந்நிலையில் மாலை சுமார் 4.30 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு காற்றுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது.

அவ்வப்போது இடியும் இடித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஓடியது. கரூர் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதை காணமுடிந்தது. மேலும் கார் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள் முன்பக்க விளக்கை எரியவிட்டபடி சென்றனர். இந்த மழையால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மரம் விழுந்தது

லாலாபேட்டை பஞ்சப்பட்டி அருகே போத்துராவுத்தன்பட்டியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தரகம்பட்டி-குளித்தலை நெடுஞ்சாலையில் உள்ள பழமையான வாதனமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த செல்ல பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

நொய்யல்-நச்சலூர்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி ,திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, புகழிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வந்தனர். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்குகொடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு சிரமத்துடன் சென்றனர்.

மழையளவு

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-34.8, அரவக்குறிச்சி-8, க.பரமத்தி-48.4, குளித்தலை-3, கிருஷ்ணராயபுரம்-1, மாயனூர்-2, பாலவிடுதி-36.2, மைலம்பட்டி-4. மொத்தம் 138.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Next Story