கரூர் மாநகர பகுதியில் கனமழை


கரூர் மாநகர பகுதியில் கனமழை
x

கரூர் மாநகர பகுதியில் காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

அக்னி நட்சத்திரம்

கரூரில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வெயில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்போது 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டியது. பின்னர் சில நாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பின்னர் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. சில நாட்களில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

இதனால் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் மழை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை. பின்னர் கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வாட்டி வதைத்தது. 106.4 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இந்நிலையில் கடந்த 29-ந்தேதி அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தது. பின்னர் கடந்த 1-ந்தேதி கரூரில் கனமழை பெய்தது. அதன்பின்னரும் கரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

கனமழை

இந்நிலையில் கரூரில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. பின்னர் மாலை 6 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு காற்றுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. அவ்வப்போது இடி இடித்தது. இந்த மழையானது கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை பெய்தது. இந்த திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையால் கரூரில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story