கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையினால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒரே நாளில் 124.9 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கொட்டி தீர்த்த கனமழை
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை இரவு வரை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, தேவதை அருவி, பியர் சோலா அருவி, வட்டக்கானல் அருவி உட்பட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மழை காரணமாக நேற்று முன்தினம் மாலை ஏரிச்சாலையில் சுமார் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நடைப்பயிற்சி சென்றவர்கள், வாகன ஓட்டிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
124.9 மில்லி மீட்டர் மழை
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இருந்து அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பெருக்கெடுத்த ஓடிய தண்ணீர் கொடைக்கானல் பஸ் நிலையத்திற்குள் புகுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் உள்பட அதிகாரிகள் குழுவினர் விரைந்து சென்று தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. பேத்துப்பாறை அருகே உள்ள பெரிய ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். நேற்று காலை 8 மணி வரை, கொடைக்கானல் போட் கிளப்பில் 124.9 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.