புதுக்கோட்டையில் பலத்த மழை


புதுக்கோட்டையில் பலத்த மழை
x

புதுக்கோட்டையில் இன்று மாலைக்கு மேல் பலத்த மழை பெய்ததால் கடை வீதியில் வியாபாரம் பாதிப்படைந்தது.

புதுக்கோட்டை

பலத்த மழை

புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து இன்று பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்தன. மாலை 4.30 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேரம் செல்ல செல்ல வேகமாக பெய்ய தொடங்கியது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாமல் ஒரே சீராக சுமார் 2½ மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையாக பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வியாபாரம் பாதிப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று காலையில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பூஜை பொருட்கள், விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. மாலையிலும் வியாபாரம் களை கட்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மழையின் காரணமாக வியாபாரம் பாதிப்படைந்தது. களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை விற்பனைக்காக வைத்திருந்தவர்கள் அதன் மீது பிளாஸ்டிக் கவரை போட்டு மூடினர். இதேபோல பூக்கள் வியாபாரம் செய்தவர்கள் மழையில் குடையை பிடித்தப்படி நின்றனர். சாலையோர கடைகளில் பதாகைகளை குடையாக வியாபாரிகள் பயன்படுத்தினர். இந்த மழையினால் சாலையோரம் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதில் வாகனங்கள் சீறியபடி சென்றன. மழைநீரோடு கழிவு நீரும் கலந்து சாலையில் பாய்ந்தோடியது. பொதுமக்கள் சிலர் மழையில் நனைந்தப்படியும், குடைகளை பிடித்தப்படியும் சென்றனர்.

இன்னிசை நிகழ்ச்சிகள் ரத்து

தொடர்ந்து இரவில் மழை தூறியபடி இருந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல இடங்களில் இன்னிசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் மழையின் காரணமாக அவை ரத்து செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

அரிமளம்

அரிமளம் ஒன்றியம் நமணசமுத்திரம், லேனாவிளக்கு, கடியாபட்டி, ராயவரம், ஆணைவாரி, செங்கீரை, கீழப்பனையூர், சமுத்திரம், தாஞ்சூர், கீரணிப்பட்டி, கே.புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ராயவரம் பகுதியில் சுமார் 4 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்தனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story