திருச்சியில் பலத்த மழை
திருச்சியில் நேற்று பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகரில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
வாகன ஓட்டிகள் அவதி
இதில் பாரதிதாசன் சாலை, சாஸ்திரி சாலை, வில்லியம்ஸ் சாலை, உழவா் சந்தை, காந்தி மார்க்கெட், உறையூர், ஒத்தக்கடை சிக்னல் உள்ளிட்ட சாலைப் பகுதிகள் மற்றும் தெரு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் ஓரத்தில் இருந்த குப்பைகள் மழை நீருடன் கலந்து சாலையின் நடுவே சென்றன. மேலும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி சென்றனர். இதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகினா்.
முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. இந்த மழை காரணமாக, திருச்சி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல், மணிகண்டம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.