வால்பாறை பகுதியில் கன மழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது-மலைப்பாதையில் மண்சரிவு
வால்பாறை பகுதியில் பெய்த கன மழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்்தது. மேலும் மலைப்பாதை சாலையில் மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.
வால்பாறை
வால்பாறை பகுதியில் பெய்த கன மழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்்தது. மேலும் மலைப்பாதை சாலையில் மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.
கன மழை
வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணை கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி சோலையாறு அணையிலிருந்து ஜூலை 11 -ந்தேதியிலிருந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் இரவு முதல் வால்பாறை பகுதியில் இரவிலும் பகலிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மீண்டும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருசில எஸ்டேட் பகுதியில் சிறிது நேரம் கனமழையும் பெய்தது.
மண் சரிவு
இந்த மழை காரணமாக வால்பாறை அருகில் உள்ள வாகமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. பின்னர் மழை குறைந்ததும் மழைத் தண்ணீர் வடிந்தது.
வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் ஒரு சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது. மண்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் இருக்கும் மரங்கள் சரிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும், மண் சரிவு ஏற்பட்டிருக்கும் இடங்களில் இருக்கும் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.