விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரத்தில் இன்று காலையில் வெயில் வாட்டிய நிலையில், மாலை 6 மணிக்கு இடி- மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இதேபோல் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களான பிடாகம், கண்டமானடி, கோலியனூர், சாலைஅகரம், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்றும் மழை நீடித்தது. கள்ளக்குறிச்சியில் மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, இரவு 7 மணியை கடந்தும் பெய்து கொண்டே இருந்தது. இதனால், கள்ளக்குறிச்சி துருகம் சாலை, சேலம் மெயின்ரோடு மற்றும் பல்வேறு தெருக்கள், சாலைகளில் கழிவுநீருடன் கலந்த மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.இதேபோன்று சங்கராபுரம், கல்வராயன் மலை உள்ளிட்ட மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் மழை பெய்தது.