நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் கடந்த 28-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென், வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது.
11 மாவட்டங்களில் கனமழை
அதன்படி, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மழை அளவு
அதனைத்தொடர்ந்து நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அதற்கு மறுநாள் (சனிக்கிழமை) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், வீரகனூர் 5 செ.மீ., நாலுமுக்கு 4 செ.மீ., ஸ்ரீவைகுண்டம், காக்காச்சி, ஊத்து பகுதிகளில் தலா 3 செ.மீ. சமயபுரம், பாலவிடுதி, கங்கவல்லி, பெலாந்துறை, அண்ணாமலை நகர், தேவிமங்கலம், ஸ்ரீமுஷ்ணம், பஞ்சப்பட்டி, நாகர்கோவில், தலைவாசல், தென்பரநாடு, சேத்தியாத்தோப்பு, மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.