தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
கோடை வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைத்தாலும், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அவ்வப்போது கோடை மழையும் தன் பங்குக்கு பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடைகாலத்தில் பெய்யவேண்டிய இயல்பான மழை அளவைவிட 65 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
12 மாவட்டங்களில் கனமழை
அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினம் (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சூளகிரி 7 செ.மீ., சின்னார் அணை 6 செ.மீ., வறட்டுப்பள்ளம் 4 செ.மீ., தேன்கனிக்கோட்டை, வி.களத்தூர், குன்றத்தூர் தலா 3 செ.மீ., செம்பரம்பாக்கம், குமாரபாளையம், அம்மாபேட்டை, துவாக்குடி, கோத்தகிரி, விரகனூர், கவுந்தம்பாடி, திருவாலங்காடு, தாமரைப்பாக்கம், ஆவடி, கெட்டி, திருவள்ளூர், ஏற்காடு, மேற்கு தாம்பரம் தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
நாளையுடன் விடைபெறும் அக்னி நட்சத்திரம்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் இருக்கும். அந்த வகையில் நடப்பாண்டில் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கினாலும், கோடை மழை இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
கோடை மழை சற்று குறைந்ததும் அக்னி நட்சத்திர வெயில் தன்னுடைய உக்கிரத்தை வெளிகாட்டியது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் இந்த கத்தரி வெயில் காலத்தில் உச்சபட்ச வெயில் பதிவாக இருந்து வருகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 இடங்களுக்கு மிகாமல் வெயில் 100 டிகிரியை கடந்து சுட்டெரிக்கிறது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திர வெயில் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) விடைபெற இருக்கிறது. இதனால் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் உக்கிரத்துடன் இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.