கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
x

தாழ்வு மண்டலம் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகருவதால், வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பான அளவிலேயே மழை அளவு பதிவாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது வங்கக்கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது நாளை (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை வழியாக குமரிக்கடல் நோக்கி நகர இருக்கிறது.

இந்த நிகழ்வு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

6 மாவட்டங்களில் கனமழை

அதன்படி, இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மறுதினம் (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் தினத்தன்று தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை முதல் வருகிற 25-ந்தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 'நாலுமுக்கு 3 செ.மீ., காக்காச்சி, மாஞ்சோலை, ஊத்து தலா 1 செ.மீ.' மழை பதிவாகியுள்ளது.


Next Story