கனமழை எச்சரிக்கை - கடலூர், மயிலாடுதுறை, நாகைக்கு அமைச்சர்களை அனுப்ப முதல் அமைச்சர் உத்தரவு


கனமழை எச்சரிக்கை - கடலூர், மயிலாடுதுறை, நாகைக்கு அமைச்சர்களை அனுப்ப முதல் அமைச்சர் உத்தரவு
x

கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார்.

அப்போது, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட அவர், இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனமழை தொடர்பான எச்சரிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை (நவம்பர் 11) வரை 221.0 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 17 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் இன்றுவரை, 8 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 8 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும், 22 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஏற்பட கூடுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுளள்து. அதன்படி, கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் அந்த மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களின் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story