சென்னையில் இரவு முழுவதும் தொடரும் கனமழை


சென்னையில் இரவு முழுவதும் தொடரும் கனமழை
x

சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. புறநகர் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகம் இருந்து வருகிறது.

மாநகர், புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

இந்த மழை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story