சூறாவளி காற்றுடன் பலத்த மழை
திருக்கோவிலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரில் நேற்று முன்தினம் நண்பகல் முதல் மாலை வரை கடுமையான வெயில் அடித்தது. இதனால் ஏற்பட்ட புழுக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலுக்கு அஞ்சி சிலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். மழை பெய்து குளிர்வித்தால்தான் வெப்பம் தணியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் மாலை 6 மணியளில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. முதல் லேசான குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. ஆனால் மழை பெய்ய வில்லை. பின்னர் இரவு 9:30 மணி அளவில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலை, தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கி நின்றது. சூறாவளி காற்று வீசியபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.