சூறைக்காற்றுடன் கனமழை; மரங்கள் வேரோடு சாய்ந்தன
விராலிமலையில் சூறைக்காற்றுடன் கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தகர கொட்டகை சேதமடைந்தது.
கனமழை
விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த கன மழையில் கொடும்பாளூர் அருகே உள்ள கோனாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அடைக்கன் என்பவரின் தகர கொட்டகை மேற்கூரையானது காற்றில் அடித்து செல்லபட்டு சேதமடைந்தது. ஆனால் வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மரங்கள் சாய்ந்தன
இதேபோல் கொடும்பாளூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இருந்த தகர மேற்கூரையானது நேற்று முன்தினம் அடித்த காற்றில் பறந்து சென்று தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் கிடந்தது.
இதேபோல் விராலிமலை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த கனமழைக்கு அத்திப்பள்ளத்தில் சாலையேராத்தில் இருந்த புளியமரங்கள் வேேராடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னமராவதி, காரையூர்
பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள தொட்டியம்பட்டி, ஏனாதி, வார்ப்பட்டு, ஆலவயல், அம்மன்குறிச்சி, கொப்பனாப்பட்டி, ரெட்டியாப்பட்டி, மூலங்குடி, கட்டையாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காரையூர் சுற்றுவட்டார பகுதியான மேலத்தானியம், முள்ளிப்பட்டி, சூரப்பட்டி, கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, நல்லூர், காரையூர் உள்பட சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கந்தர்வகோட்டை, திருவரங்குளம்
கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவரங்குளம் வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் பகலில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் வெயிலின் தாக்கம் இருந்தது. இதற்கிடையே நேற்று மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. அதன்பின் சிறிது நேரம் தூறிய பின் மழை நின்றது. பின்னர் இரவில் 7 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து ஓரே சீராக பரவலாக பெய்தது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
அரிமளம், அறந்தாங்கி
அரிமளம், கடையக்குடி, வன்னியம்பட்டி, ஓணாங்குடி, கே.புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை, கல்லூர், சமுத்திரம், மேல்நிலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. பகலில் கடுமையான வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீச வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.