இடி- மின்னலுடன் பலத்த மழை


இடி- மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 13 Aug 2023 12:15 AM IST (Updated: 13 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

விழுப்புரம்

விழுப்புரம்,

பலத்த மழை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலுக்கு இணையாக வெயில் கொளுத்தியதால் அதன் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் வாடி வதங்கினர்.

இந்நிலையில் நேற்றும் விழுப்புரத்தில் காலையில் இருந்து மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் திடீரென பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்தது. இந்த மழை, ½ மணி நேரமாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரமாக விட்டு விட்டு லேசான சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

இந்த மழையினால் விழுப்புரம் நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சீரான வேகத்தில் சென்றதை காண முடிந்தது. அதுபோல் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், ரெயில்வே மைதானம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் சுதந்திர தின விழாவையொட்டி நேற்று மாலை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருந்த நிலையில் திடீரென பெய்த மழையினால் அது தடைபட்டது.

பஸ் நிலையத்தில்...

பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு இருக்க நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரும் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. திடீரென பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து மாலை வேளையில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story