இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை
பொள்ளாச்சியில் திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
பொள்ளாச்சி பகுதிகளில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும். இதனால் அணைகள் முழுகொள்ளளவை எட்டி விடும். பாசனத்திற்கும், குடிநீருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்தப்படி மழை பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் குறைவாக உள்ளது. இதனால் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் நேற்று காலையில் இருந்து வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து பகல் 3 மணிக்கு பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் திடீரென்று இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மாலையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தப்படி சென்றனர்.
இதற்கிடையில் புளியம்பட்டியில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். மேலும் நடந்து சென்ற பொதுமக்கள் மீது மழைநீரை வாகனங்கள் வாரிஇறைத்ததால் கடும் அவதிப்பட்டனர். இதேபோன்று மழைநீர் வடிகால் அடைப்பு காரணமாக விஜயபுரம் பகுதியிலும் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்லடம் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சில பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வடிகால் உள்ள இடங்களில் தூர்வாரதால் சாலைகளில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழைக்கு முன்பு சாலைகளில் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.