சென்னைக்கு மிக அருகில் நெருங்கிய 'மாண்டஸ்' புயல்..!!


தினத்தந்தி 9 Dec 2022 6:06 PM GMT (Updated: 9 Dec 2022 6:08 PM GMT)

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னை அருகே 70 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கியது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

தற்போது மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னை அருகே 70 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது.

மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னையின் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது!

மாண்டஸ் புயலின் மையப் பகுதி இன்னும் கடலில் உள்ளதால் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் நடக்கும் என்றும் புயலின் மையப்பகுதி கடலில் உள்ளது என்றும் வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கனமழை மற்றும் சூறாவளி காரணமாக சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனிடையே மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகர பேருந்துகளின் இரவு நேர சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இரவு முழுவதும் 550 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அனைத்து பேருந்துகளும் பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு மேல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயலால் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


Next Story