தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கனமழை..!
தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.
சென்னை,
தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. உப்பளம், உருளையான்பேட்டை, ராஜ்பவன், கடற்கரை சாலை, கன்னியாகோயில், திருக்கனூர், மதகடிபட்டு, காட்டேரிகுப்பம், வம்புப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்தது.
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. வசூர், குன்னத்தூர், மாம்பட்டு, அல்லிநகர், குருவிமலை, கரைபூண்டி, வெண்மணி, செங்குணம், முருகாபாடி, தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளன. ஓமலூர் நகர பகுதிகளில், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கச்சிராயப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது. இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.