ஏற்காட்டில் பலத்த மழை: பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்..!


ஏற்காட்டில் பலத்த மழை: பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்..!
x

ஏற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் போக்குவரத்திற்காக ஓடையின் இடையே போடப்பட்டுள்ள ஆத்துப்பாலம் மூழ்கியது.

ஏற்காடு:

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணியளவில் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழையால் ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு கிராமம் மலைப்பாதை வழியாக குப்பனூர் செல்லும் வழியில் வாழவந்தி கிராமத்தை அடுத்துள்ள ஆத்துப்பாலம் என்னும் இடத்தில் வனப்பகுதியில் ஓடும் ஓடையில், பல ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்படியான மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

இதனால் அங்கு போக்குவரத்திற்காக ஓடையின் இடையே போடப்பட்டுள்ள ஆத்துப்பாலம் மூழ்கடித்த நிலையில் காடுகளில் உள்ள மரம், செடி, கொடி, பாறை கற்கள் என அனைத்தையும் தள்ளிக்கொண்டு காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து சுமார் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்கு மழை வெள்ளம் நீடிக்க வாய்ப்புள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story