கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவி


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவி
x

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

இதுக்குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோருக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் புதிய திட்டத்தை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்துக்கு செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது,

இந்த திட்டம் கேர் 1 மற்றும் கேர் 2 என்ற 2 வகை திட்டங்களை உள்ளடக்கியது, கேர் 1 திட்டத்தின்படி 2020 - 2021 மற்றும் 2021 - 2022 ஆகிய 2 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தாமாகவோ அல்லது தமது வாரிசுகள் மூலமோ ஏற்கனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோன்று மற்றொரு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க 25 சதவீதம் அரசு மானியத்துடன் (அதிகபட்சமாக வங்கி ரூ.25 லட்சம் வரை) நிதி உதவி வங்கியின் மூலம் வழங்கப்படும்.

இதில் திட்டமதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை இருக்கலாம். விண்ணப்பதாரர் 55 வயதுக்கு மேற்படாதவராகவும், குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களும் பயன்பெறலாம்.

கேர் 2 திட்டத்தின் கீழ் கொரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் நுட்ப மேம்பாடு அல்லது நவீன மயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட எந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சமாக 25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும்.

23.3.2020- க்கும் பின்னர் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இதற்கான விண்ணப்பங்களை www.msmetamilnadu.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக பதிவிடலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காஞ்சீபுரம் என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story