வேளாண் பொருள் விற்பனை சட்டத்தில் தொந்தரவு செய்யும் அதிகாரிகள் பற்றி புகார் செய்ய உதவி எண் - தமிழக அரசு அறிவிப்பு


வேளாண் பொருள் விற்பனை சட்டத்தில் தொந்தரவு செய்யும் அதிகாரிகள் பற்றி புகார் செய்ய உதவி எண் - தமிழக அரசு அறிவிப்பு
x

வேளாண் பொருள் விற்பனை சட்டத்தில் தொந்தரவு செய்யும் அதிகாரிகள் பற்றி புகார் செய்ய உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி நியாயமான விலை கிடைக்க செய்வதற்காகவும், விளைபொருட்களின் வர்த்தகத்தை முறைப்படுத்துவதற்கும் 1987-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் இயற்றப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. 40 வேளாண் விளைபொருட்கள் ஒரே சீரான அறிவிக்கை செய்யப்பட்டு 1 சதவீத சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

முந்திரியைப் பொறுத்தவரையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரிக்கு சந்தை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அவ்வாறு கொண்டு வரப்படும் முந்திரி உருமாற்றம் செய்தோ அல்லது பக்குவப்படுத்தியோ தமிழ்நாட்டில் இருந்து விற்பனை செய்யும்பட்சத்தில் அந்த வர்த்தகம் சந்தை கட்டணம் செலுத்துவதற்கு உட்பட்டது.

வேளாண் விளைபொருட்களை வேறு மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கோ, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ பரிவர்த்தனை செய்யப்படும் போது உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. தக்க ஆவணங்கள் மற்றும் சந்தை கட்டண ரசீது வைத்திருப்போருக்கு அதிகாரிகளால் இடையூறு ஏற்பட்டால் அதன் மீதான புகார்களை 24 மணி நேர கைபேசி 7200818155 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story