இனிமேல் உங்களிடம் நான் தமிழ் மொழியில் பேசப் போகிறேன் - பிரதமர் மோடி
தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லையே என்று மிகவும் வருந்துகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி,
நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார்.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடை பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நீங்கள் அனைவரும் எனக்கு இங்கு கொடுக்கும் அன்பை என்னால் உணர முடிகிறது. நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். ஆனால், என்னால் தமிழ் மொழியை தெளிவாக பேச முடியவில்லை. தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லையே என்று மிகவும் வருந்துகிறேன்.
இக்குறைபாட்டை சரி செய்ய தொழில்நுட்பத்தின் துணையை நான் நாடியுள்ளேன். இனிமேல், உங்களிடம் நான் தமிழ் மொழியில் பேசப் போகிறேன். இதன்படி, சமூக ஊடகமான எக்ஸ் வலைதளப்பக்கத்தில், நமோ செயலி, இனி தமிழிலும் வரவுள்ளது. அதில் உங்களிடம் என் குரலிலேயே, எந்த உணர்ச்சியில் நான் பேசுகிறேனோ அதே உணர்ச்சியில் தமிழிலேயே நான் பேசுவேன். என் இந்த முயற்சி உங்கள் அன்பால் வெற்றி அடையும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.