முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு


முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
x

நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர், தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக போலீசில் துணை நடிகை ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த மணிகண்டனுக்கு எதிராக பல குற்றச்சாட்டை சுமத்தி குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகை சார்பில் இந்த புகாரை திரும்ப பெறுவதாக கூறப்பட்டது. அதற்கு நீதிபதி, "பொய் புகார் கொடுத்து தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக மணிகண்டன் எதிர்காலத்தில் வழக்கு தொடர்ந்தால் என்னவாகும்? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story