முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கி.பி. 13-ம் நூற்றாண்டு கல்லுப்பள்ளி


முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கி.பி. 13-ம் நூற்றாண்டு கல்லுப்பள்ளி
x

ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டில் வரலாற்று சிறப்பு வாய்ந்த முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டில் வரலாற்று சிறப்பு வாய்ந்த முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

சுற்றளி

முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கோவில் சுற்றளி எனப்படுவது போல முழுவதும் கற்களால் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல் கல்லுப்பள்ளி எனப்படுகிறது. பாண்டியர் முதல் சேதுபதிகள் வரையிலான காலத்தில் கட்டப்பட்ட பழமையான கல்லுப்பள்ளிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ளன.

அவ்வாறான ஒரு கல்லுப்பள்ளி தான் பெரியபட்டினத்தில் உள்ள ஜலால் ஜமால் பள்ளி. தொழுகை மாடம், மகாமண்டபம், முன்மண்டபமும் அதனை சுற்றிலும் தாழ்வாரம் அமைந்திருக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள தாழ்வாரம் முன்மண்டபமாக உள்ளது.

ஆய்வு

இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளியை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:- மகாமண்டபத்தின் உள்ளே மேற்குப் பகுதியின் நடுவில் ஒரு குவிந்த அமைப்பில் தொழுகை மாடம் உள்ளது. மகாமண்டபத்தின் தெற்கிலும் வடக்கிலும் தலா ஒரு வாசலும், கிழக்கில் 3 வாசல்களுமாக மொத்தம் 5 வாசல்கள் உள்ளன.

இஸ்லாமியரின் 5 கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (தர்மம்), ஹஜ் என்பதன் அடையாளமாக ஐந்து வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் கிழக்கில் உள்ள 3 வாசல்களில் நடுவில் உள்ள வாசலில் இருந்து தொழுகை மாடம் வரை அதன் இருபுறமும் கூட்டு தூண்கள் உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் பாண்டியர் கால வெட்டுப்போதிகையும், நாயக்கர் கால தாமரைப்பூ, பூப்போதிகைகளும் உள்ளன.

பிற்கால பாண்டியர்

இங்கு உள்ள தூண்கள் மற்றும் போதிகைகளின் அமைப்பைக் கொண்டு இப்பள்ளி பிற்காலப் பாண்டியர் காலத்தில் கி.பி.12-13-ம் நூற்றாண்டுகளில் தமிழர் கட்டிடக்கலை அமைப்பில், கடற்கரை பாறைகளால் கட்டப்பட்டு விஜயநகர, நாயக்கர், சேதுபதி மன்னர்கள் காலத்தில் சீரமைக்கப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் உள்ள கி.பி.1247-ம் ஆண்டை சேர்ந்த 2-ம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டில், கீழ்ச்செம்பி நாட்டு பவித்திர மாணிக்க பட்டினத்தில் இருந்த சோனக சாமந்தப்பள்ளியான பிழார்ப்பள்ளி என்ற இஸ்லாமிய பள்ளி குறிப்பிடப்படுகிறது.

அவ்வூரில் இருந்த பிழார் பள்ளி, தரிசாப்பள்ளி ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ளன.

நகரா இசைக்கருவி

பெரியபட்டினம் ஜலால் ஜமால் பள்ளியில் உள்ள பிற்கால பாண்டியர்களின் வெட்டுப் போதிகைகள், சதுர தூண்கள், திருப்புல்லாணி, வாலாந்தரவை கல்வெட்டுகள் ஆகியவை மூலம் இப்பள்ளிதான் பிழார்பள்ளி என்பதை அறிய முடிகிறது. இங்கு நகரா என்ற ஒரு பெரிய இசைக்கருவியும் உள்ளது. இது தொழுகைக்கு மக்களை அழைக்க முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story