பள்ளிகளுக்கு விடுமுறை:வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் சமவெளிப்பகுதிகளில் வெயிலின் தாக்குதல் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
வால்பாறை
பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் சமவெளிப்பகுதிகளில் வெயிலின் தாக்குதல் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
சுற்றுலா பயணிகள் வருகை
தமிழகத்தில் பிளஸ் -2, பிளஸ் -1 மற்றும் பள்ளிகளுக்கான தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில் விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் சமவெளியில் கடுமையான வெயில் காரணமாகவும் கோடைக்காலத்தை கொண்டாடவும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மழை பெய்து வருவதால் வால்பாறை பகுதி முழுவதும் இதமான காலசூழ்நிலை நிலவி வருகிறது. சமவெளிப் பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. அதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாலும் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
போக்குவரத்துக்கு இடையூறு
எனவே இதனை கருத்தில் கொண்டு வால்பாறை பகுதியில் உள்ள நகராட்சி நிர்வாகம், போலீசார், வனத்துறையினர், சுகாதார துறையினர் உட்பட அனைத்து துறையினரும் இணைந்து வருகிற மே மாதம் வரை வால்பாறை பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக சுற்றுலா பயணிகளின் வாகனங்களின் வருகையால் வால்பாறை நகரில் உள்ள மெயின் ரோட்டில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளூர் வாசிகளின் வாகனங்கள் மாற்று இடத்தில் நிறுத்தவும், வாடகை கார்கள் போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்
மேலும் வால்பாறை பகுதியில் உள்ள கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, வெள்ளமலை டனல், சின்னக்கல்லாறு நீர் வீழ்ச்சி, நீராறு அணை மற்றும் சோலையாறு அணை ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவில் வனவிலங்குகளை பார்ப்பதற்காக எஸ்டேட் பகுதிகளுக்குள் செல்லும் வாகனங்களையும், வனப் பகுதிக்குள் செல்வதையும் தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் கேரள மற்றும் கர்நாடக பகுதியில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் சார்பில் வால்பாறை நகர் பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும், நகர் பகுதியில் உள்ள நகராட்சி கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதற்கும் வால்பாறை பகுதி உள்ளூர் வாசிகள் மற்றும் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.