புனித ஆரோக்கிய அன்னை ஆடம்பர தேர் பவனி
மேலக்குடிகாடு புனித ஆரோக்கிய அன்னை ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மேலக்குடிகாடு கிராமத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி சிறப்பு திருப்பலியை நடத்தினார். இந்தநிலையில், புனித ஆரோக்கிய அன்னை ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. பங்குத்தந்தை சூசை மாணிக்கம் தேர் மந்திரிப்பு, திருப்பலி செய்து வைத்தார். வாண வேடிக்கையுடன் ஆடம்பர தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கியது. முன்னதாக பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட சப்பரத்தில் புனித ஆரோக்கிய அன்னை மலர் அலங்காரத்துடன் காட்சி தந்தார். நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மக்கள் திரளானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலக்குடிகாடு கிராமத்தை சேர்ந்த பங்குத் தந்தைகள், கிராம நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.