வீடுகளில் புத்தகங்கள் நிறைந்திருக்க வேண்டும்-அமைச்சர் மெய்யநாதன் அறிவுரை


வீடுகளில் புத்தகங்கள் நிறைந்திருக்க வேண்டும்-அமைச்சர் மெய்யநாதன் அறிவுரை
x

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு மனித நேயத்துடன் நடக்க வேண்டும் எனவும், வீடுகளில் புத்தகங்கள் நிறைந்திருக்க வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

புதுக்கோட்டை

புத்தக திருவிழா

புதுக்கோட்டையில் 6-வது புத்தக திருவிழாவில் 2-ம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புத்தக அரங்குகளை பார்வையிட்டு, கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். புத்தக திருவிழாவில் 'தினத்தந்தி' பதிப்பக புத்தக அரங்கில் வைக்கப்பட்டு இருந்த புத்தகங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:- குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம். புத்தகங்கள் தான் அறிவாற்றலை தரும். புத்தகங்களை படித்து கேள்வி கேளுங்கள். நூலகங்களை உருவாக்குவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வீடுகளில் புத்தகங்கள் நிறைந்திருக்க வேண்டும்.

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் கவிஞர்கள் அதிகளவில் உள்ளனர். இந்தியாவில் தமிழகத்தில் மருத்துவ சேவைக்காக அமெரிக்காவை சேர்ந்த பெண் மருத்துவர் ஐடா ஸ்கட்டர் வேலூரில் தொடங்கிய சிறு மருத்துவமனை தான் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய சி.எம்.சி. மருத்துவமனையாக உள்ளது. அங்கு 2-வது மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மனித நேயத்துடன் நடக்க வேண்டும்

பொதுமக்களுக்காக வாழ்ந்தவர்கள் வரலாற்று சாட்சியாக நிற்கின்றனர். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன் நடக்க வேண்டும். வரலாற்று சிறப்பு வாய்ந்தவர்களாக மாறுவதற்கு கல்வி மிக முக்கியம். புத்தகங்களை படிக்கும் போது நாம் அறிவின் வளர்ச்சிக்கு செல்வோம். தமிழகம் கல்வி, பொருளாதாரத்தில் 20 ஆண்டுகள் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. புத்தக திருவிழாவை அர்ப்பணிப்போடு நடத்துவது பாராட்டத்தக்கது.

எல்லோரையும் பாராட்டுங்கள். மற்றவர்களை கிண்டலாக விமர்சிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். உங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிலவில் கனிம வளங்கள்

நிகழ்ச்சியில் புதுடெல்லி விஞ்ஞான் பிரசார் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பேசுகையில், ''சந்திராயன் 2-வில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்று, அதிநவீன தொழில்நுட்பத்துடன் சந்திராயன்-3 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. நிலவில் நிச்சயம் தரையிறங்கி சாதனை படைக்கும். இந்தியாவின் அடுத்த கட்டம், இங்கிருந்து செல்லும் ராக்கெட், அங்குள்ள கனிம வளங்களை எடுத்து வைத்து மீண்டும் இந்தியாவுக்கு புறப்பட்டு வந்து சேரக்கூடிய வகையிலான திட்டமாக தான் இருக்கும். நிலவில் கனிம வளங்கள் அதிகம் உள்ளது. இதனால் தான் நிறைய நாடுகள் நிலவுக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறது'' என்றார். நிகழ்ச்சியில் அப்துல்லா எம்.பி., சின்னதுரை எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story